சினிமா செய்திகள்

சிம்புவின் “அரசன்” படம் மாபெரும் வெற்றி பெறும் - தயாரிப்பாளர் தாணு

‘அரசன்’ திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

சென்னை,

‘அரசன்’ படம் வசூலில் ஈடு இணையே இல்லாத வகையில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும். ஈடு இணையில்லாத ஒரு வெற்றியை அந்தப் படம் பெறும் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிம்பு சமீபத்தில் அறிவித்தார்.

வடசென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்ட படக்குழு

2 மாதங்களுக்கு முன் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

முக்கிய படப்பிடிப்பு நிறைவு... வைரலாகும் வீடியோ

‘அரசன்’ திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்தார். அந்த வீடியோவில், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், "இந்த ஷெட்யூல் முடிந்தது" என்று அறிவித்தவுடன், படக்குழுவினரும் சிலம்பரசனும் உற்சாகமாக கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சிலம்பரசன் கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் தருணங்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்படத்துக்காக சிம்பு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக இரவு நேர படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார் . சற்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகப் போகிறோம் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். இப்போது அந்தக் காட்சிகள் நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நோக்கி நகர்ந்துள்ளது படம்.

சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம், ‘அரசன்’ படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன தாணு, “நேற்று இயக்குநர் வெற்றிமாறனிடம் பேசினேன். படத்தின் செய்திகளை இயக்குநர்தான் சொல்ல வேண்டும். ஆனால், ‘அரசன்’ வசூலில் ஈடு இணையே இல்லாத வகையில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும். ஒவ்வொரு பிரேமிலும் அதற்கான வேலைப்பாடு இருக்கிறது. ஈடு இணையில்லாத ஒரு வெற்றியை அந்தப் படம் பெறும்” என கூறியுள்ளார்.