சினிமா செய்திகள்

தமிழக அமைச்சர்களை சந்தித்த பாடகர் வேடன்

தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரை ராப் பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

கேரளாவில் பிரபல ராப் பாடகராக வலம் வருபவர் ஹிரன்தாஸ் முரளி என்கிற வேடன். இளம் பாடகரானஇவர் வேடன் என்கிற பெயரிலே தொடர்ந்து இயங்கி வருகிறார். முதலில் சுயாதீன ராப் பாடகராக தனது கரியரை தொடங்கிய இவர் 2020ஆம் ஆண்டு ‘வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். இதை இவரே எழுதி பாடியிருக்கையில், தான் கடந்து வந்த பாதை, சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் பல்வேறு அரசியல் விஷயங்களை பேசியிருந்தார். இவரது தந்தை கேரளத்தை சேர்தவர் என்றும் தாய் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

முதல் ஆல்பம் மூலம் இசை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மஞ்சுமல்ல பாய்ஸ்’ படத்தில், ‘குத்தந்திரம்’ பாடல் மூலம் வெகுஜன ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதன் மூலம் பிரபலமும் ஆன இவர் இப்போது தொடர்ந்து முன்னணி நடிகர் படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது பாடல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நேரடி இசை நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்க்கிறது. அந்தளவிற்கு புகழ் பெற்று விளங்குகிறார்.‘நரிவேட்டை’ படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ படத்திலும் பாடியிருந்தார்.

இந்நிலையில், தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரை தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகங்களில் மரியாதை நிமித்தமாக பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

அமைச்சர் வன்னி அரசு உடனான சந்திப்பில், இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் குறித்து பாடியதற்காக ராப் பாடகர் சங்கீதன் என்பவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து இருவரும் உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வன்னி அரசு வெளியிட்டுள்ள பதிவில், “ராப் இசை உலகில் தனக்கென தனி அடையாளத்தையும் இடத்தையும் பெற்றுள்ள ராப் பாடகர் வேடன் அவர்கள் தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்தார். சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு தனது வாழ்த்துகளைக் கூறினார். தமிழீழத்தில் ராப் பாடகர் சங்கீதன், தனது பாடலுக்காக இலங்கை அரசால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். தான் அடுத்து திட்டமிட்டுள்ள முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார். விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அவருக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்” எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 26ம் தேதி கர்நாடகத்தின் முதல்வர் டி.கே. சிவக்குமாரின் இல்லத்தில் அவரை பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியது பெரும் பேசுபொருளானது.