சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கிறது.. ஆனால் எங்களுக்கில்லை?.. நடிகர் ஆரி ஆதங்கம்

‘போர்த் ப்ளோர்’ திரைப்படத்திற்கு மால்களில் உள்ள திரையரங்குகள் வழங்கப்படவில்லை என நடிகர் ஆரி குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல்,

தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய முயற்சியால் முன்னேறிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஆரி. இவரின் நடிப்பில் உருவான ‘போர்த் ப்ளோர்’ திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியாகியுள்ளது. மனோ கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இப்படத்தை எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘போர்த் ப்ளோர்’ திரைப்படத்திற்கு மால்களில் உள்ள திரையரங்குகள் வழங்கப்படவில்லை என நடிகர் ஆரி குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த படத்துக்கு மால்களில் தியேட்டர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். தற்போது அதற்காக நாங்கள் போராடி வருகிறோம். காரணம் கேட்டபோது, நீங்கள் செய்த விளம்பரம் போதவில்லை என்று தெரிவித்தார்கள். ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள்; அதனால் தியேட்டர்கள் கொடுக்கிறோம் என்றார்கள்” என்று கூறினார்.

மேலும் அவர், “தாய்கிழவி படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் விளம்பரம் செய்யும் அளவுக்கு பொருளாதார வலிமையும், யுக்தியும் உள்ளது. ஆனால் என் படத்தின் தயாரிப்பாளர் திருப்பூரில் சொந்த தொழில் செய்து சம்பாதித்த பணத்தில், அவரால் இயன்றளவு செலவு செய்து படம் தயாரித்துள்ளார். எந்த அடிப்படையில் தியேட்டர்கள் வழங்கப்படுகின்றன என்பது புரியவில்லை. எந்த படம் ஓட வேண்டும், ஓடக்கூடாது என்பதை தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல, இப்போது மால்களும் தீர்மானிக்கத் தொடங்கியுள்ளன. அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றால், புதுமுகங்களும் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களும் எப்படிப் முன்னேறுவது?” என மனவருத்தத்துடன் தெரிவித்தார்.