சினிமா செய்திகள்

“சேயோன்” படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தன் மகன் பிறந்த நாளை முன்னிட்டு ‘சேயோன்’ படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது தனது 26-வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படம், வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படம் ‘விருமாண்டி’ படத்தைப் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு, மதுரை பின்னணியில் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தன் மகன் பவன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் விருந்தளித்துள்ளார். இதன் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்திக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தையாக மகன் பிறந்தது. தனது மகனுக்கு பவன் என்று பெயர் வைத்தார் . கடந்த ஜூன் 2 ஆம் தேதியோடு பவன் இரண்டு வயதை எட்டியுள்ளார். சேயோன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தனது மகனின் பிறந்தநாளை படக்குழுவினரோடு கொண்டாடியுள்ளார்.

மேலும் மதுரை உசிலம்பட்டில் உள்ள பதினெட்டாம்படி கருப்பனசாமி கோயிலுக்கு தனது மனைவியோடு சென்று 5 அடி உயர அரிவாள் சாற்றி சாமி தரிசனம் செய்தார்.