‘மொத ராத்திரி’ படத்தின் வெற்றியை அடுத்து படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ‘மொத ராத்திரி’ படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மொத ராத்திரி’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியான ‘மொத ராத்திரி’ படம் ரூ.8 கோடி வசூலித்தது.
‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியதாக படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து இயக்குநர் ராஜா கருப்பசாமி தனது சமூகவலைதள பக்கத்தில் “உங்களைப் போல ஒரு பொழுதுபோக்குக் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன்தான் நான் சென்னைக்கு வந்தேன்.பெரிய கனவுகளைக் காணவும், திரைப்படத் துறையில் பயணிக்கவும் எனக்கு உத்வேகம் அளித்தவர்களில் நீங்களும் ஒருவர். இன்று எனக்கென ஒரு திரைப்படத்தை உருவாக்கி, அதற்காக உங்களிடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான தருணம். இந்த அன்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் எனது குழுவினரும் நானும் பெற்ற பாராட்டுக்களிலேயே மிகவும் மகிழ்ச்சியுட்டும் பாராட்டுகளில் இதுவும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமியின் ‘மொத ராத்திரி’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.