தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது தனது 26வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் தயாரிப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து உருவாக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ‘தாய் கிழவி’ பட இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்ய ஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். மேலும் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மதுரை பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
‘விருமாண்டி’ படத்தைப் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு, மதுரை பின்னணியில் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது. மதுரையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணையவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் சிவகார்த்திகேயன் வரிகளில், ‘வேலும் மயிலும்’ என்கிற பாடல் உருவாகியுள்ளது. இதனை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்பாடலை சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். இது, தனி பாடலாக உருவாகியுள்ளது.