சென்னை,
வெறும் ரூ.2 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான ‘ஹனுமான் அன்ஷ்’ படம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் ரூ.156.20 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஷால் சதுர்வேதி எழுதி இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியான பாலிவுட் திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என பக்தர்களால் போற்றப்படும் ஆன்மிக குருவின் வாழ்க்கை, தத்துவம் மற்றும் ஆன்மிக போதனைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஷோபினாவ் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. முதல் வாரத்தில் ரூ.1.08 கோடியும், 2-வது வாரத்தில் ரூ.40 லட்சமும் மட்டுமே வசூலித்தது. ஆனால் 3-வது வாரத்தில் இருந்து படத்தின் வசூல் வேகமெடுக்கத் தொடங்கியது. தற்போது 5-வது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் இப்படம், வெளியான 32-வது நாட்களில் மொத்தம் ரூ.156.20 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேகத்தில் வசூல் தொடர்ந்தால் விரைவில் ரூ.200 கோடி வசூலை கடக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வெறும் ரூ.2 கோடி வரையிலான மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘ஹனுமான் அன்ஷ்’, தற்போது வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. முதலீட்டுடன் ஒப்பிடும்போது 60 மடங்குக்கும் அதிகமான வருவாயை இப்படம் ஈட்டியுள்ளது. தொடக்கத்தில் மெதுவாக சென்றாலும், ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் பல மடங்கு உயர்ந்துள்ளது.
புதிய படங்களின் போட்டியையும் சமாளித்து தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’, குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி எதிர்பாராத அளவுக்கு வசூல் குவித்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.