‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை பெண்களும், குழந்தைகளும் விரும்பிப் பார்க்கிறார்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரும் தயாரிப்பில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு இயக்குநர் சுந்தர்.சி, நடிகை குஷ்பு சத்யம் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர். திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “மூக்குத்தி அம்மன் 2 படத்தை பெண்களும், குழந்தைகளும் விரும்பிப் பார்க்கிறார்கள். சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது. அதுவே எங்களுக்கு பாசிட்டிவ் வைப்பாக தெரிகிறது. சுந்தர் சி படத்துக்கு குடும்பம் குடும்பமாக வருவார்கள் என்பார்கள். அது இப்போதும் நடந்திருப்பதில் மகிழ்ச்சி. அதிகாலை 6 மணி ஷோவுக்கு முதல்வர் அனுமதி கொடுத்திருக்கிறார். அவருக்கும், அமைச்சர் ராஜ் மோகனுக்கும் மிக்க நன்றி. திரைத்துறையினர் நன்றாக இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார்.
இந்த அறிவிப்பு திரைத்துறையினர் அனைவருக்கும் பெரிய பிளஸ்ஸாக இருக்கிறது. ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதில் அந்தப் படத்தில் இருந்த ஊர்வசி, நயன்தாரா இருவர் மட்டும்தான் இருக்கிறார். இதைத்தாண்டி முதல் படம் வேறு கதை, இரண்டாம் பாகம் வேறு கதை” என்று கூறியுள்ளார்.