நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம், நடிகர் சூரி காமெடி நடிகராக உயர்ந்தார். விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வேதாளம், ரஜினியின் அண்ணாத்தே, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தினார். வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம், கதாநாயகனான சூரி, அதன்பிறகு கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களிலும் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வணிக ரீதியான வெற்றிகளைப் பதிவு செய்தன. ‘கருடன்’ மற்றும் மாமன் நல்ல வசூலை ஈட்டின. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.
மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான திரைப்படம் ‘மண்டாடி’. எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களயும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள், டீசர், சிறப்பு வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.இப்படத்தின்‘மண்டாடி மண்டாடி’ பாடலில் இடம்பெற்ற சூரியின் நடனம் பெரும் கவனம் ஈர்த்தது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தின் இசை நாளை (ஆகஸ்ட் 28) வெளியிடப்படும் என படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி ‘மண்டாடி’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.