சென்னை,
நடிகை சவுகார் ஜானகியின் உடல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் எனவும் அவரது உறவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
1950-60 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர் நடிகை சவுகார் ஜானகி. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சவுகார் ஜானகி, வயோதிகம் காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போது ஏற்படும் உடல்நலக்குறைவுக்கு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் வந்தார்.
சவுகார் ஜானகிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சவுகார் ஜானகி உடல்நிலை நேற்று காலை மிகவும் மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பல னின்றி அவர் நேற்று பிற்பகல் மரணம் அடைந்தார். சவுகார் ஜானகியின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சவுகார் ஜானகியின் உடல் இறுதிச்சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. சவுகார் ஜானகியின் உடல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் எனவும் அவரது உறவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.