இலங்கை யாழ்பாணத்தில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கிளிநொச்சியை சேர்ந்த ராப் பாடகர் சங்கீத்சன் (வயது24), ஈழ விடுதலை குறித்து பாடியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயன்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ராப் பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
சங்கீத்சன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கண்டனப் போராட்டங்கள் வெடித்தன. அவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதோடு மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், சங்கீத்சன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்ட வழக்கு பின்னர் சாதாரண குற்றப் பிரிவுகளின் கீழ் மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதிமன்றம், சங்கீத்சனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சங்கீத்சனை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருந்தார்.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட பிரபல மலையாள ராப் பாடகர் வேடன் தமிழ்நாட்டின் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசுவை சென்னையில் சந்தித்து சங்கீத்சன் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் வன்னி அரசு உடனான சந்திப்பில், இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் குறித்து பாடியதற்காக ராப் பாடகர் சங்கீதன் என்பவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து இருவரும் உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, வன்னி அரசு வெளியிட்டுள்ள பதிவில், “ராப் இசை உலகில் தனக்கென தனி அடையாளத்தையும் இடத்தையும் பெற்றுள்ள ராப் பாடகர் வேடன் அவர்கள் தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்தார். தமிழீழத்தில் ராப் பாடகர் சங்கீதன், தனது பாடலுக்காக இலங்கை அரசால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். தான் அடுத்து திட்டமிட்டுள்ள முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார். விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அவருக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்” எனக் கூறப்பட்டிருந்தது.