சினிமா செய்திகள்

சமூக வலைதளங்களில் இருந்து விலகியதால் மன நிம்மதி அதிகரித்துள்ளது! - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமூக வலைதளங்களில் இருந்து விலகிய பிறகு தனது மன அமைதி அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

மருத்துவப் படிப்பை முடித்த ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான ‘நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா ’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘மாயாநதி’, ‘வரத்தன்’ உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் ‘ஆக்ஷன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’, ‘தக் லைப்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.

புதிய படைப்புகளில் கவனம்

தற்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அர்ஜுன் தாஸ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியுள்ள ‘லவ்’ என்ற நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்துள்ளார். மேலும், மலையாளத் திரைப்படமான ‘ஆஷா’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில், சமூக வலைதளங்களில் இருந்து விலகிய தனது முடிவு குறித்தும், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இருந்து விலகியதால் நிம்மதி!

கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் இருந்து விலகிய ஐஸ்வர்யா லட்சுமி, ஓராண்டுக்கும் மேலாக அந்த முடிவில் உறுதியாக இருந்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்துப் பேசிய அவர், சமூக வலைதளங்களில் இருந்து விலகிய பிறகு முன்பைவிட அதிக மன அமைதியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் நிலவும் தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பது தனக்கு நிம்மதியை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் முன்பு இருந்தபோது ஏற்பட்ட பாதிப்புகள் இப்போதும் ஓரளவுக்கு இருந்தாலும், அவற்றைத் தொடர்ந்து பார்த்து மனதளவில் பாதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்கள் புதிய படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், திரைத்துறையில் வாய்ப்புகளைப் பெறவும் உதவுகின்றன என்பதை ஏற்றுக்கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி, தனிப்பட்ட முறையில் அவற்றிலிருந்து விலகியிருப்பதே தனக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT