சினிமா செய்திகள்

'அம்மா' சங்கத்தில் பரபரப்பு... தலைவர் பதவியை ராஜினாமா செய்த சுவேதா மேனன்!

சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுவதாக அவர் தெரிவித்தார்.

கொச்சி,

மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வின் தலைவராக பிரபல நடிகை சுவேதா மேனன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்று சங்கத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தனர். கடந்த சில மாதங்களாக சங்க நிர்வாகத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று நடந்த 'அம்மா' அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் நடிகை சுவேதா மேனன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்

அதாவது, நேற்று பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் கே.பி. பரமேஸ்வரன் வருடாந்திர அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் அந்த அறிக்கை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வரவு-செலவு கணக்கு விவரங்களில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதனால் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் பதவியை ராஜினாமா செய்த சுவேதா மேனன்

இந்த விவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, 'அம்மா' தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகை சுவேதா மேனன் அறிவித்தார். அதுமட்டுமின்றி, சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தனது தலைமையிலான 17 பேர் கொண்ட செயற்குழுவும் ஒரே நேரத்தில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த திடீர் முடிவு மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக சங்கத்தின் புதிய நிர்வாகம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.