இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் இன்று தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபாஸ் நடித்து வரும் ‘பவுசி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
‘சீதா ராமம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் ‘பவுசி’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் இமான்வி, அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ‘பவுசி’ திரைப்படம் டிசம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் அதிரடி சண்டைக் காட்சிகளும் காதல் உணர்வுகளும் கலந்த கதைக்களத்தில் தயாராகி வருகிறது. பிரபாஸின் மாறுபட்ட தோற்றமும், ஹனு ராகவபுடியின் இயக்கமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
சமீபத்தில் வெளியான ‘பவுசி’ படத்தின் போஸ்டர், போரினால் சிதைந்த பின்னணியைக் கொண்டிருந்ததால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், ‘Declassifying File No. 25’ என்ற வாசகத்துடன் புதிய அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.