சினிமா செய்திகள்

‘இந்திய சினிமாவை உலக அளவில் உயர்த்துவதற்கு இத்தகைய முதலீடு தேவை’ - ‘ராமாயணா’ பட்ஜெட் குறித்து யாஷ் விளக்கம்

‘ராமாயணா’ திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் 2 பாகங்களாக உருவாகி வருகிறது.

மும்பை,

ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் இன்னொரு ஆஸ்கார் இசையமைப்பாளரான உலகப் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இந்த படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

'ராமாயணா' திரைப்படத்தின் டிரெய்லர் ஜூலை 30-ந்தேதி காலை 4:15 மணிக்கு (பிரம்ம முகூர்த்தத்தில்) வெளியானது. பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 'ராமாயணா' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘ராமாயணா’ படம் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக பரவி வரும் தகவல் குறித்து நடிகர் யாஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “இந்த படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. உண்மையில் ரூ.4,000 கோடி என்பது முதல் பாகத்திற்கு மட்டுமான செலவு அல்ல.

இரண்டு பாகங்களின் தயாரிப்பு, விளம்பரம், உலகளாவிய வெளியீட்டுச் செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஹாலிவுட் கணக்கீடு இது. இந்திய சினிமாவை உலக அளவில் ஒரு மென்சக்தியாக உயர்த்துவதற்கு இத்தகைய முதலீடுகள் தேவை” என்று தெரிவித்தார்.