சினிமா செய்திகள்

சந்தீப் கிஷனின் புதிய பான் இந்தியா படம்... பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில், இயக்குநர் உகந்தர் முனி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை,

பேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வரும இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சந்தீப் கிஷன் இதுவரை இல்லாத தோற்றத்தில் வீரராக குதிரை மீது சவாரி செய்து, கையில் வாளுடன் தோன்றுகிறார்.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன், தமிழில் யாருடா மகேஷ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற, கேப்டன் மில்லர், ராயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

'சிக்மா' படத்தின் ரிலீசுக்காக காத்திருப்பு

தற்போது, நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பர்ஸ்ட் லுக் வெளியீடு

இதற்கிடையில், ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் தனது 33-வது திரைப்படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார். இயக்குநர் உகந்தர் முனி இயக்கும் இந்த படத்திற்கு 'கரிகாலா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாகும் கரிகாலா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில், இயக்குநர் உகந்தர் முனி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வீரர் தோற்றத்தில் மிரட்டும் பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சந்தீப் கிஷன் இதுவரை இல்லாத தோற்றத்தில் வீரராக குதிரை மீது சவாரி செய்து, கையில் வாளுடன் தோன்றுகிறார். அவருக்கு அருகில் சிங்கம் ஓடுவது போன்ற காட்சியமைப்பு இடம்பெற்றுள்ளதால், படம் பிரமாண்டமான பேண்டஸி உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

இந்த திரைப்படம், பழமையான 'சந்தமாமா' நாட்டுக்கதைகளில் இருந்து ஈர்க்கப்பட்ட பேண்டஸி கதைக்களத்தில் உருவாகிறது. மறைந்த ராஜ்யங்கள், மாய சக்திகள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் புராணக் கதைகள் நிறைந்த ஒரு கற்பனை உலகத்தை திரையில் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக வெளியாகும் 'கரிகாலா'

பிரமாண்டமான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் 2027ம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி, இரண்டாம் பாகம் 2027 அக்டோபர் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.