சூர்யா திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 29 ஆண்டுகள் கடந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமான ‘நேருக்கு நேர்’ திரைப்படம் இன்றுடன் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகிவிட்டது. வசந்த் இயக்கத்தில் விஜய் -சூர்யா ஆகியோரது நடிப்பில் 1997ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றாலும் ஒரு பக்கம் இந்த படத்தினால் பெரும் விமர்சனத்தை சூர்யா சந்தித்தார். நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என்றாலும், முதல் படத்திலேயே கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் தொடர்ந்து நடிப்பதென்றே முடிவை சூர்யா எடுத்தார்.
காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா ஆகிய படங்களில் நடித்தார். மீண்டும் வசந்த் இயக்கத்தில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் நடித்தார். அவர் அறிமுகமாகி ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘பிரண்ட்ஸ்’ படம் வரவேற்பை பெற்றது. இயக்குநர் பாலாவின் ‘நந்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் அவருக்கு முதல் வெற்றி கிடைத்தது. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘காக்க காக்க’ படம் சூர்யாவை ஒரு கமர்ஷியல் நடிகராகவும் உயர வைத்தது. ஜெய்பீம், கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.
கடந்த 29 வருடங்களில் பல்வேறு படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ‘காக்க காக்க - அன்புச் செல்வன்’, ‘பிதா மகன் - சக்தி’, ‘பேரழகன் - பிரேம்குமார் என்கிற சின்னா’, ‘கஜினி - சஞ்சய் ராமசாமி’, ‘சில்லுனு ஒரு காதல் - கௌதம்", ‘வாரணம் ஆயிரம் - கிருஷ்ணன், சூர்யா’, ‘அயன் - தேவா’, ‘ஆதவன் - முருகன்’, ‘சிங்கம் -துரைசிங்கம்’, ‘ஏழாம் அறிவு - போதிதர்மன், அரவிந்த்’, ‘சூரரைப் போற்று - நெடுமாறன்", ‘ஜெய் பீம் - சந்துரு’, ‘விக்ரம் -ரோலக்ஸ்’ ஆகிய படங்களும், கதாபாத்திரங்களும் மறக்க முடியாதவை. ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை சூர்யா பெற்றார்.
இந்நிலையில், சூர்யா 29 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், 2டி நிறுவனம் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.