சினிமா செய்திகள்

“சீன்” பட விழாவில் தனுஷுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

சூர்யா, நஸ்லென், நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ படம் வரும் நவம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது.

தீபாவளிக்கு ‘சீன்’ படம் வெளியாவதால் தனது ‘ஓம்’ படத்தின் ரிலீஸை தள்ளிவைத்த நடிகர் தனுஷுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்தார்.

சூர்யா 47

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியாக சூர்யா

‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

நவம்பர் 6-ந்தேதி ரிலீஸ்

சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளியாகும் ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, நஸ்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய நடிகர் சூர்யா, தனுஷுக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், “தனுஷுக்கு நன்றி. தீபாவளிக்கு சீன் படம் வெளியாவதால், நான் தள்ளி வரேன் என டுவீட் போட்டிருந்தார். அவருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷின் ‘ஓம்’ பட ரிலீஸ் தேதி மாற்றம்

தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தை பொறுத்தவரை கடந்த அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ‘ஜெயிலர் 2’ படம் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யாவின் ‘சீன்’ படம் வெளியாவதால், ‘ஓம்’ அன்று வெளியாகாது என தனுஷ் அறிவித்தார். அதன்படி ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT