சினிமா செய்திகள்

4 வாரத்தில் ரூ.340 கோடி வசூல் ஈட்டிய சூர்யாவின் “கருப்பு”

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

சென்னை,

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வெளியான நாள்முதல் வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.

படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

வசூலில் சாதனை படைத்த ‘கருப்பு’

கோடை விடுமுறை காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட ‘கருப்பு’, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. படம் வெளியான பல வாரங்களுக்குப் பிறகும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் ‘கருப்பு’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார்களை பரிசாக வழங்கினார் சூர்யா.

இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

‘கருப்பு’ திரைப்படம் இன்று (ஜூன் 12) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.