சினிமா செய்திகள்

தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிகை தபு விளக்கம்

50 வருடங்களுக்கு மேலாக தனது தந்தையை ஒரு முறை கூட பார்க்கவில்லை என நடிகை தபு கூறியிருக்கிறார்

தமிழில் 1996-ல் அப்பாஸ் மற்றும் வினீத் நடித்த ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நடிகை தபு அறிமுகமானார். அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்திலும் தபுவின் நடிப்பு பேசப்பட்டது. தபுவின் தந்தை ஜமால் ஹஸ்மி, தாய் ரிஸ்வானா. தபு பிறந்து 3 ஆண்டுகளில் பெற்றோர் இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டனர்.

தற்போது தபுவுக்கு 54 வயதாகிறது. இத்தனை ஆண்டுகளில் தபு தனது தந்தையின் பெயரை எங்கேயும் உச்சரித்ததும் இல்லை, பயன்படுத்தியதும் இல்லை. அதேநேரம், தனது வெற்றிக்கு முழு முதற் காரணம் தனது தாய்தான் என்று அவர் பலமுறை நெகிழ்ந்துள்ளார். தபுவின் தாய் ஒரு பள்ளி ஆசிரியர். அவரே தபுவையும் அவரது அக்காவையும் வளர்த்திருக்கிறார்.

தபு தனது தந்தை பெயரை தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தாது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “எனது பெற்றோர் விவாகரத்து ஆகிவிட்டனர். அப்போது எனக்கு வயது 3. எனது அம்மா ஓர் ஆசிரியை. இதனால் அதிகமான நேரத்தை எனது பாட்டியுடன் கழித்தேன். எனது பாட்டி புத்தகம் படிப்பது, பிரார்த்தனை செய்வது என்று நேரத்தை செலவிட்டார். நானும் அது போன்ற ஒரு சூழலில் வளர்ந்தேன்.

எனது தந்தையுடன் எனக்கு எந்த தொடர்பும் இருந்தது இல்லை. நான் அவரை சந்திக்க விரும்பியதும் இல்லை, சந்தித்ததும் இல்லை. பள்ளியில் படிக்கும் போதே எனது பெயர் தபசும் பாத்திமா தான். தந்தையின் பெயரை எனது பெயருக்கு பின்னால் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என நினைத்தேன். அதன்படி அவர் பெயரை சேர்க்கவில்லை. அவரை பற்றிய எந்த நினைவுகளும் எனக்கில்லை. எனது சகோதரி அவரை ஒரு முறை சந்தித்து இருக்கிறார். ஆனால், நான் சந்திக்க விரும்பவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

நடிகை தபு திருமணம் செய்துகொள்ளவில்லை. தபு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகை ஷபானா ஆஸ்மியின் சகோதரன் தான் தபுவின் தந்தை ஜமால் ஹஸ்மி. விஜய் சேதுபதியின் புதிய படத்தில் நடிகை தபு நடித்துள்ளார்.