சினிமா செய்திகள்

'ராகினி 3' படப்பிடிப்பில் இணைந்த தமன்னா... கிளாப் போர்டு புகைப்படம் வைரல்

கிளாப் போர்டை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தமன்னா பகிர்ந்துள்ளார்.

2011-ம் ஆண்டு வெளியான 'ராகினி எம்.எம்.எஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, 2014-ம் ஆண்டு சன்னி லியோன் நடிப்பில் வெளியான 'ராகினி எம்.எம்.எஸ் 2' திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், ஹிந்தி திரையுலகின் பிரபல ஹாரர் - த்ரில்லர் தொடரான 'ராகினி 3' திரைப்படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.

தமன்னா இணைந்ததால் அதிகரித்த எதிர்பார்ப்பு

இந்தப் படத்தின் மூலம் நடிகை தமன்னா முதன்முறையாக 'ராகினி' தொடரில் இணைந்துள்ளார். இதனால், பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களிடையேயும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.

படப்பிடிப்பில் இணைந்த தமன்னா

'ராகினி 3' படத்தின் படப்பிடிப்பில் தற்போது தமன்னா இணைந்துள்ளார். படப்பிடிப்பின் முதல் நாளில், 'Day-01' என்று எழுதப்பட்ட கிளாப் போர்டை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நட்சத்திர பட்டாளம்... புதிய இயக்குநர்

இந்தப் படத்தில் தமன்னாவுடன் ஆயுஷ் சர்மா, ஜூனைத் கான், நர்கிஸ் பக்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், 'ராகினி' தொடரின் முந்தைய பாகங்களிலிருந்து மாறுபட்டு, ஷஷாங்கா கோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். வழக்கமான சூப்பர்நேச்சுரல் ஹாரர் மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்களுடன், முற்றிலும் புதிய கதைக்களத்தில் 'ராகினி 3' உருவாகி வருகிறது.