தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன், முன்னாள் செயலாளர்கள் ஏ.எல். அழகப்பன், டி. சிவா, முன்னாள் பொருளாளர்கள் கஹஜாமைதீன், சந்திரபிரகாஷ் ஜெயின், வி.சி. குகநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், கமிலா நாசர், சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி, தயாரிப்பாளர்களின் நலன், திரைத்துறையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளும் ஆலோசனைகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மானியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்ததற்கும், பண்டிகைக் காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ஒரு வாரத்திற்கு ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதற்கும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த முக்கியமான நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இக்கூட்டம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
சங்க தலைவர் தமிழ்குமரன் “தமிழ் திரைப்பட சங்கத்தின் முன்னாள் தலைவர்களை அழைத்து சங்க வளர்ச்சி குறித்து கலந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். 2015 முதல் 2022ம் ஆண்டு வரை 224 திரைப்படங்களை தேர்வு செய்து மானியம் வழங்கும் வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதனை உடனடியாக ஏற்று அரசு மானியம் வழங்கியுள்ளது
காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். உடனடியாக அதனை நிறைவேற்றி தந்த அவருக்கும், அமைச்சர் ராஜ்மோகனுக்கு சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சினிமா துறையில் இருந்து சென்றதால் எங்கள் கஷ்டம் அவருக்கு தெரியும்.
8 ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த மானியத்தை தீபாவளிக்கு முன்பாக முதல்வர் வழங்கியது இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலைமையில் நிறைய தயாரிப்பாளர் இருந்தனர். மானியம் வந்தது அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த குத்தம்பாக்கத்தில் சினிமா நகரம் உருவாக்குவதற்காக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தவிர மூத்த தயாரிப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விழா ஒன்றை நடத்த உள்ளோம். இவ்வளவு சலுகைகள் கொடுத்த முதல்வருக்கு அனைத்து சினிமா சங்கம் சார்பில் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.