கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

தமிழில் எடுக்கும் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் - வைரமுத்து

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பிரேக் பாஸ்ட்'.

சென்னை,

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 'பிரேக் பாஸ்ட்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணவ் நாயகனாக நடித்துள்ளார். அவரோடு ரோஸ்மின், கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார்.

சென்னையில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கவிஞர் வைரமுத்து பேசும்போது, "அந்த கால நடிப்புக்கும், இந்த கால நடிப்புக்கும் வித்தியாசம் உணர்ந்து இருப்பீர்கள். இப்போது நடித்தல் என்பது இருத்தல் என்று ஆகிவிட்டது. நீ கதாபாத்திரமாக மட்டுமே இரு.. எதுவும் செய்யாதே என்று சொல்லியே நடிக்க வைக்கிறார்கள்.

திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சினைதான் இந்த படம். இந்தக் கதை எனக்கு பிடித்தாலும், படத்தின் தலைப்பில் உடன்பாடு இல்லை. ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் அகில உலகத்திலும் ஒரு படம் ஓடி விடும் என்று உங்களுக்கு யார் சொன்னது? அப்படி என்றால் எல்லா ஆங்கில படமும் உலகம் முழுவதும் ஓடியிருக்க வேண்டுமே!

நான் இதை குறையாக சொல்லவில்லை. தமிழன் என்ற முறையில் என்னுடைய ஆதங்கமாக சொல்கிறேன். நாம் வைக்கும் தமிழ் பெயர் ஒரு கோடி பேரால் உச்சரிக்கப்படும், எழுதப்படும், பகிரப்படும். தமிழில் எடுக்கும் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும்" என்று கூறினார்.