கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

அரிய நோய்களை மையமாகக் கொண்டு வெளியான தமிழ் திரைப்படங்கள்... ஒரு பார்வை!

அரிய நோய்கள் மற்றும் வித்தியாசமான மருத்துவப் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவான திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழ் சினிமாவில் பல்வேறு வித்தியாசமான கதைக் களங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மருத்துவ உலகில் காணப்படும் அரிய நோய்கள் மற்றும் வித்தியாசமான மருத்துவப் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவான சில திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வகையில் அரிய நோய்களை மையமாகக் கொண்டு வெளியான சில திரைப்படங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

கோப்புப்படம்

அந்நியன்

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அந்நியன்'. இந்த படத்தில் கதாநாயகனுக்கு 'டிசோசியேட்டிவ் ஐடென்டிட்டி டிஸ்ஆர்டர்' (Dissociative Identity Disorder/split personality) என்ற மனநல பாதிப்பு இருக்கும்.

டிசோசியேட்டிவ் ஐடென்டிட்டி டிஸ்ஆர்டர் என்பது ஒருவரின் அடையாள உணர்வில் இடையூறுகளும், நினைவில் இடைவெளிகளும் ஏற்படக்கூடிய அரிய மனநல பாதிப்பு ஆகும். இது வெறும் மனநிலை மாற்றமோ, ஒருவர் விரும்பியபடி வேறு நபராக மாறுவதோ அல்ல. இதன் காரணங்கள் மற்றும் வெளிப்பாடுகள் சிக்கலானவை.

படத்தில் சமூகத்தில் நடக்கும் தவறுகளை, விதிமுறைகளை பின்பற்றாதவர்களை தட்டிக் கேட்க முடியாத நிலையில் இருக்கும் கதாநாயகனுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு, தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்குவது போலவும், பழிவாங்குவது போலவும் காட்டப்பட்டிருக்கும். எனினும், இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள் அனைவரும் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பது உண்மையல்ல.

கோப்புப்படம்

கஜினி

2005-ம் ஆண்டில் நினைவாற்றல் பாதிப்பை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படம் 'கஜினி'. முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கதாநாயகனுக்கு தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்துக்குப் பிறகு, புதிய நிகழ்வுகளை நீண்ட நேரம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத, ஆன்டிரோகிரேட் அம்னீசியா (Anterograde Amnesia) என்ற பாதிப்பு ஏற்படுவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது காயத்துக்குப் பிறகு, ஒருவரால் புதிய நினைவுகளை உருவாக்கி நீண்டகால நினைவாகத் தக்கவைத்துக்கொள்ளவோ அல்லது சமீபத்திய தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளவோ ​​முடியாது. இதுவே ஆன்டிரோகிரேட் அம்னீசியா ஆகும். அதே சமயம், அந்த நிகழ்வுக்கு முந்தைய பழைய நினைவுகள் பாதிப்பின்றி இருக்கும்.

முன்னதாக ஹாலிவுட்டில் இதே பாதிப்பை மையமாகக் கொண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2000-ம் ஆண்டு 'மெமன்டோ' என்ற படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நான் சிகப்பு மனிதன்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மருத்துவ பாதிப்பை மையமாகக் கொண்ட படங்களில் விஷால் நடிப்பில் 2014-ல் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில், கதாநாயகன் நார்கோலெப்சி (Narcolepsy) எனப்படும் நரம்பியல் தூக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பார்.

இந்தக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமான தூக்கம் ஏற்படலாம். சிலருக்குத் திடீரெனத் தூங்கும் நிலையும் ஏற்படும். இதனால் வேலை செய்வது, வாகனம் ஓட்டுவது, படிப்பது போன்ற அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். மேலும், சிலருக்கு தீவிரமான உணர்ச்சிகளால் தசைகளில் திடீர் பலவீனம் ஏற்படலாம். இதற்கு ‘கேடாப்ளெக்ஸி’ (Cataplexy) என்று பெயர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருக்கலாம்.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில், தீவிரமான உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது கதாநாயகன் தூங்கிவிடுவதாக காட்டப்பட்டிருக்கும். இருப்பினும், உண்மையில் நார்கோலெப்சி பாதிப்பு உள்ள அனைவருக்கும் உணர்ச்சி வசப்படும்போதுதான் தூக்கம் வரும் என்று கூற முடியாது. நோயின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

ஈட்டி

அதர்வா நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான ஈட்டி திரைப்படத்தில் நாயகனுக்கு 'கிளான்ஸ்மேனின் த்ரோம்பாஸ்தீனியா' (Glanzmann's thrombasthenia) என்ற நோய் இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இதனால் கதாநாயகனுக்கு உடலில் சின்ன காயம் ஏற்பட்டால்கூட ரத்தம் உறையாமல் வெளியேறிக் கொண்டே இருக்கும் என்று கூறப்பட்டிருக்கும்.

ஆனால் உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டாலே கட்டுப்படுத்த முடியாமல் ரத்தம் வெளியேறும் என்று கூற முடியாது. ரத்தப்போக்கின் தீவிரம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

'கிளான்ஸ்மேனின் த்ரோம்பாஸ்தீனியா' மரபணு மாற்றத்தால் ஏற்படும் அரிய ரத்தப்போக்கு கோளாறாகும். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் (Platelets) காயம் ஏற்பட்ட இடத்தில் ஒன்றிணைந்து ரத்தம் உறைவதற்கு உதவும் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் மூக்கில் ரத்தம் வடிதல், ஈறுகளில் ரத்தப்போக்கு, சிறிய காயங்களுக்குப் பிறகும் நீண்ட நேரம் ரத்தம் வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கும் ஏற்படக்கூடும்.

கோப்புப்படம்

ராட்சசன்

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க சீரியல் கில்லர் திரைப்படங்களில் ஒன்று 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலாபால், முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியானது. இதுவரை பார்த்த திரைப்படங்களில் நாயகனுக்கு அரிய மருத்துவ பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் வெர்னர் சிண்ட்ரோம் (Werner Syndrome) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்.

வெர்னர் சிண்ட்ரோம் என்பது ஒரு அரிய மரபணுக் கோளாறு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையான வயதை விட மிக விரைவாகவே வயதான தோற்றத்திற்கு (முதுமைக்கு) மாறிவிடுவர். இதனால் தலைமுடி நரைத்தல், தோலில் மாற்றங்கள், கண்புரை, உடல் தோற்றத்தில் முதுமைக்கான அறிகுறிகள் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

படத்தில் இந்த நோய் காரணமாக பள்ளிப் பருவத்தில் அந்த கதாபாத்திரம் கடுமையான கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கப்படும். இதனால் ஏற்படும் மன உளைச்சலும், கோபமுமே அந்த கதாபாத்திரம் பின்னாட்களில் சைக்கோ சீரியல் கில்லராக மாறுவதற்கு காரணமாக காட்டப்படும்.

SCROLL FOR NEXT