புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்கு தினசரி ஆறு காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் - திரையரங்குகள் செயல்படும் நேரத்தை காலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையில் நீட்டிப்பது, சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்காக அரசு சார்பில் ஓடிடி தளம் உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
திரையரங்குகளில் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த வலியுறுத்தியும் முதல்வர் விஜய்யிடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியுசர்ஸ் அசோசியேஷன்ஸ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு திரைப்படங்களை நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி 4-காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள், வெளியிடப்படும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொதுவிடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.