சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், சினிமாத்துறையின் நலன் கருதி அதிரடியான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, நடிகர்களின் சம்பள முறை மற்றும் ஓடிடி வெளியீடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் முன்னணி நடிகர்கள் வியாபார பங்கீட்டு முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், வெப் சீரிஸ்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டுள்ளன. திரைப்படங்களில் நடித்துக்கொண்டு ஓடிடி வெப் சீரிஸ்களில் நடிக்கும் நடிகர்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னணி நடிகர்கள் பலரும் வியாபார பங்கீட்டு முறையில் நடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2, 2026 தேதியன்று வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளீர்கள்
திரைத்துறை சார்ந்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறையை என்றுமே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரித்தது இல்லை, இனியும் ஆதரிக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து இதுவரை எங்களுக்கு எந்தவித கடிதமோ, மின்னஞ்சவோ அனுப்பப்படவில்லை என்பதையும், அது தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நிகழ்த்த அழைக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தங்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் முதலீட்டையும் பிரதானமாக பாதிக்கக்கூடிய இந்த தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெறுமாரும், முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியான பிறகு பரஸ்பரம் பொருத்தமான ஒரு தேதியில் இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து சுவந்தாலோசனை செய்து தீர்மானிக்கலாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ” எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்து அறிக்கை விடுத்துள்ளது. அதில் “ நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் நடிக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து கடந்த 3 வருடங்களாக நடிகர் சங்கம் எந்த முடிவும் எடுக்காததால், பொருளாதார இழப்பு ஏற்படும் என தெரிந்தும் அடையாள வேலைநிறுத்தம் என முடிவு செய்துள்ளோம்.எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வோம், புறக்கணிக்கும் பட்சத்தில் அடையாள வேலை நிறுத்தம் தொடரும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.