சினிமா செய்திகள்

‘அசுரன்’ முதல் ‘பொன்னியின் செல்வன்’ வரை… நாவல்களை தழுவி உருவான திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவான சில திரைப்படங்களைக் குறித்து இதில் பார்ப்போம்.

தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் சினிமாவுக்கும் இடையே நீண்டகாலத் தொடர்பு உள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படங்கள், தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. காதல், குடும்ப உறவுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், அரசியல், வரலாறு, மனித உணர்வுகள் எனப் பல்வேறு கருப்பொருள்களை நாவல்கள் முன்வைத்தன. அவற்றைத் திரைக்கதையாக மாற்றி, காட்சிகளின் வழியாக ரசிகர்களிடம் கொண்டு சென்றன திரைப்படங்கள்.

சில திரைப்படங்கள் நாவலின் கதையை அப்படியே பின்பற்றின. சில திரைப்படங்கள் நாவலின் மையக் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, சினிமாவுக்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டன. தமிழ் சினிமாவில் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவான சில திரைப்படங்களைக் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

சொல்ல மறந்த கதை

சேரன் நடிப்பில், இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சொல்ல மறந்த கதை'. இந்த படத்தின் கதை நாஞ்சில் நாடன் எழுதிய 'தலைகீழ் விகிதங்கள்' என்ற நாவலின் திரை வடிவமாகும். ஒரு ஆணின் சுயமரியாதை, குடும்பப் பந்தங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் ஆகியவற்றை யதார்த்தமான கிராமிய மற்றும் நகரப் பின்னணியில் பேசிய இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கோப்புப்படம்

நான் கடவுள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு பாலா இயக்கிய திரைப்படம் 'நான் கடவுள்'. பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும் மனிதர்கள், அவர்களைச் சுரண்டும் கும்பல்கள், விளிம்புநிலை மக்களின் துயரமான வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டது ‘ஏழாம் உலகம்’ நாவல்.

இந்த நாவலின் மையக் கருத்துகளை எடுத்துக்கொண்டு, காசியில் வாழும் ஓர் அகோரியின் வாழ்க்கையையும் இணைத்துத் திரைக்கதை அமைத்திருந்தார் இயக்குநர் பாலா. ஆர்யா, பூஜா உள்ளிட்டோர் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான இப்படம், வழக்கமான வணிகத் திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட கதைக்களத்தாலும், விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்திய விதத்தாலும் கவனம் பெற்றது.

பரதேசி

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரமான வாழ்க்கையைப் பதிவு செய்த நாவல் ‘ரெட் டீ’. பி. எச்.டேனியல் எழுதிய இந்த ஆங்கில நாவல் 1969-ம் ஆண்டு வெளியானது. இதனை இரா. முருகவேள் தமிழில் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் எதிர்கொண்ட சுரண்டல், வறுமை, கொடுமைகள் ஆகியவற்றை இந்த நாவல் விவரிக்கிறது. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் பாலா உருவாக்கிய திரைப்படம் ‘பரதேசி’. அதர்வா, தன்ஷிகா, வேதிகா உள்ளிட்டோர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான இப்படம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை வலிமையாகச் சித்தரித்ததுடன், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றது.

கோப்புப்படம்

விசாரணை

எழுத்தாளர் மு. சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நூலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விசாரணை’. காவல்துறையினரால் தான் எதிர்கொண்ட கைது, விசாரணை, சித்திரவதை உள்ளிட்ட கொடுமைகளைத் தனது அனுபவங்களின் அடிப்படையில் மு. சந்திரகுமார் இந்த நூலில் பதிவு செய்திருந்தார்.

அந்த அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவான ‘விசாரணை’ திரைப்படம், காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம், அப்பாவிகள் எதிர்கொள்ளும் அநீதிகள், அதிகார மையங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. 2015-ம் ஆண்டு வெளியான இப்படம் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. இந்தியாவின் சார்பில் 2017-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படமாகவும் இது அமைந்தது.

அசுரன்

எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலின் அடிப்படையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'அசுரன்'. சாதிய ஒடுக்குமுறை, நிலம் சார்ந்த மோதல்கள், வன்முறை, குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தந்தை மேற்கொள்ளும் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது 'வெக்கை' நாவல். இந்த நாவலின் அடிப்படைக் கருத்துகளை எடுத்துக்கொண்டு, திரைமொழிக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களுடன் ‘அசுரன்’ திரைப்படத்தை உருவாக்கியிருந்தார் வெற்றிமாறன்.

தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

கோப்புப்படம்

பொன்னியின் செல்வன்

சோழப் பேரரசின் வரலாற்றுப் பின்னணியில் காதல், வீரம், அரசியல் சூழ்ச்சி, நட்பு, தியாகம், அரியணைப் போட்டி எனப் பல அம்சங்களை இணைத்து எழுதப்பட்ட அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல், பல தலைமுறை வாசகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த நாவலை திரைப்படமாக எடுக்க பலர் முயற்சி செய்துள்ளனர்.

இறுதியாக இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' நாவலை அதே பெயரில் இரண்டு பாகங்களாக இயக்கினார். 2022-ம் ஆண்டு முதல் பாகமும், 2023-ம் ஆண்டு இரண்டாம் பாகமும் வெளியானது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான இந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. அதே நேரத்தில், நாவலில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் திரைப்படத்தில் மாற்றப்பட்டிருந்ததால், நாவலை வாசித்த ரசிகர்களிடையே மாறுபட்ட கருத்துகளும் எழுந்தன.

கோப்புப்படம்

நாவல்களின் ஆழமான கதைகளும், கதாபாத்திரங்களும் திரையில் உயிர்பெறும்போது, அவை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகின்றன.

SCROLL FOR NEXT