ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார்.
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
கஞ்சா கருப்பு “இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், கவிதாலயா சரவணன் அண்ணன் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர் தேனியின் மன்னன். சினிமா உலகின் கடவுளைப் போன்றவர். இந்தப் படத்தின் இயக்குநர் ராம்தேவுக்கு ஒரு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்குத் போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பிற்கு வரச் சொன்னார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின் ஷாப்பிற்குச் சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு வரவில்லை.
நான் சென்று கடை கதவைத் தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம், 'நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்திருக்கிறேன்.இயக்குநர் இங்குதான் வரச் சொன்னார்' என்றேன்.
அதன் பிறகு புரொடக்ஷன் நபர் எனக்குப் போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார். இன்னொரு முக்கியமான விஷயம், தற்போது இரவு 9:45 மணிக்கே கடைகளை முழுமையாக மூடிவிடுகிறார்கள். இந்த ஆட்சியில் மதுக்கடைகளை இரவு 12 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதேபோல் காலையில் 7 மணிக்கே திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஆங்காங்கே ஒயின் ஷாப்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. எனவே, கடைகளின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
‘மக்கள் தலைவா’ இசை வெளியீட்டு விழா நிகழ்வில் நடிகர் கஞ்சா கருப்பு பேசிய விஷயம், சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.