கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது, அங்கிருந்த காமா மருத்துவமனை ஊழியர்கள் வெளிப்படுத்திய துணிச்சல் மற்றும் தியாகம் பலரின் பாராட்டைப் பெற்றது. அச்சமயம் செவிலியர்கள், வார்டு உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் இணைந்து சுமார் 400 பேரின் உயிர்களைக் காப்பாற்றினர்.
அவர்களின் இந்த வீரச் செயலையும் தியாகத்தையும் மையமாகக் கொண்டு ‘பாரத் பாக்ய விதாதா’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் செவிலியர் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், அரியானா மாநில முதல்-மந்திரி நயாப் சிங் சைனிக்கு ‘பாரத் பாக்ய விதாதா’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தனது மனைவி, அமைச்சர்கள் மற்றும் நடிகை கங்கனா ரனாவத்துடன் இணைந்து அவர் திரைப்படத்தை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயாப் சிங் சைனி, திரைப்படத்தை பாராட்டியதுடன், அரியானா மாநிலத்தில் ‘பாரத் பாக்ய விதாதா’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.