சினிமா செய்திகள்

நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை 'தலைவர்' பிறந்தநாள் கொண்டாட்டம் - ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் ஒரு மாத காலம் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாளை நவம்பர் 12-ம் தேதி தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி ஒரு மாதகாலம் கொண்டாட உள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள் 2026 டிசம்பர் 12 அன்று கொண்டாடப்பட உள்ளது. 1950 டிசம்பர் 12 இல் பிறந்த ரஜினிகாந்த், இந்த ஆண்டு தனது 76-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி அவரது தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் புது முன்னெடுப்பை எடுத்துள்ளார். அதாவது ஒரு மாத காலமாக ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த கொண்டாட்டம் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

'தலைவர்' பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் தனது 75-வது வயதிலும் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். சிறுவயது முதலே ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்து வரும் அவர், தனது வாழ்க்கையிலும் திரைப்பயணத்திலும் ரஜினிகாந்துக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸின் பதிவு

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “வாழ்நாள் முழுவதும் தலைவரின் ரசிகனாக, 75 வயதிலும் அவர் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவரது 76-வது பிறந்தநாளையும் இந்த மாபெரும் வெற்றியையும் இணைத்து, நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை ஒரு மாதம் கொண்டாட விரும்புகிறேன்.

தலைவரை நேரில் அழைத்து, அவர் முன்னிலையில் இந்தக் கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால், எளிமையையும் அடக்கத்தையும்

விரும்பும் அவரது குணத்தை அறிந்ததால், அவருக்காக ரசிகர்களாகிய நாமே நம் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கொண்டாட்டத்தை நடத்துகிறோம். சிறுவயது முதலே நான் தலைவரை ரசித்து வருகிறேன்; இன்று நான் இந்தத் துறையில் இருப்பதற்கும், எனக்கு கிடைத்த அனைத்திற்கும் அவரே காரணம். அவரைப் போன்ற ஒரு நட்சத்திரம் இனி வரப்போவதில்லை. இந்த ஆண்டு அனைத்து தலைவரின் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமையப் போகிறது' இவ்வாறு அதில் தெரிவித்திருக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT