சினிமா செய்திகள்

“அதனால்தான் இந்திப் படங்களில் நடிப்பதில்லை” - சிம்ரன் ஓபன் டாக்

நடிகை சிம்ரன் பாலிவுட் சினிமா பற்றி பேசியுள்ள கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த சிம்ரன், தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். இதற்கிடையில் பாலிவுட் சினிமா பற்றி அவர் பேசியுள்ள கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.

சிம்ரன் கூறும்போது, “இந்தி படங்களில் நான் நடிக்க மறுத்துள்ளேன். ஏனெனில் அங்கிருப்பவர்களின் மனநிலையுடன் என்னால் ஒன்றிப்போக முடியவில்லை. தென்னிந்திய நடிகர்களின் சாதனைகளை, பாரம்பரியத்தை பாலிவுட் சினிமா கண்டுகொள்வது கிடையாது. அங்கு மரியாதையும் இல்லை. இது வருத்தம் அளிக்கிறது.

என் வாழ்நாளில் பாதிக்கும் மேலான காலத்தை நான் சினிமாவுக்காகக் கொடுத்திருக்கிறேன். அப்படியிருந்தும் எனக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றால், அது வலிக்கிறது. சில தயாரிப்பு நிறுவனங்கள் அடிப்படை வசதிகளுக்காகக் கூட பேரம் பேசுகின்றன. ஓட்டல்கள் மற்றும் பயணச்சீட்டுகளுக்காகவும் பேரம் பேசுகிறார்கள். இந்த விஷயங்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்கின்றன.

அதனால் தான் இந்திப் படங்களில் நான் நடிப்பதில்லை. சமீபத்தில் சன்னி தியோலுடன் 'கப்ரு' படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதுபோல அனைவருமே நடந்துகொண்டால் நல்லது", என்றார்.