‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 30ந் தேதி வெளியான படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் குறிப்பாக முதியவர் வேடத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஈர்த்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து எம்.எஸ்.பாஸ்கர் கூறும்போது, "என்னை பொறுத்தவரை டைரக்டர் சொல்வதை செய்கிறேன். நல்ல கதைக்காக எதையும் செய்யலாம். அப்படித்தான் அந்த வயதான முதியவர் தோற்றத்தில் நடித்தேன். என் குரலையும் மாற்றிக் கொண்டேன். நான் யார்? என்று ரசிகர்கள் என்னை அடையாளம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அந்த கதாபாத்திரத்தை ரசித்தாலே போதும். அதிலேயே நான் நிறைவு கொள்வேன். அப்படித்தான் சினிமாவில் பயணிக்கிறேன்”, என்றார்.