சென்னை,
மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய கிரைம் திரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படத்தை கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். சுவிஸ் பிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குனர் பாலாஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான சித்து சித் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் அறிமுகமான தர்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, சாப்ளின் பாலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் பாலாஜி கூறியதாவது:- "சமூகத்தில் நிலவி வரும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த கிரைம் திரில்லர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலைக் கிராமம் ஒன்றில் தொடர்ச்சியாக நடைபெறும் மர்மக் கொலைகளும், அந்தக் கொலைகளின் பின்னணியை கண்டறிய போலீசார் மேற்கொள்ளும் விசாரணையும் படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. இறுதியில் அந்த மர்மத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாரஸ்யமான திருப்பமாக இருக்கும்," என்றார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வண்டிப்பெரியார், அச்சன்கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் உள்ளிட்ட இயற்கை எழில் சூழ்ந்த சவாலான மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது. 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.