திரைப்பட வாய்ப்புகளைத் தேடி சென்னைக்கு வந்தபோது, நவராத்திரி விழாவின்போது கடைகளில் வழங்கப்பட்ட சுண்டல், பொரி, கடலை ஆகியவற்றை வாங்கிச் சாப்பிட்டு பசியாற்றியதாக இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் வீட்டில் நவராத்திரி இசை நிகழ்ச்சிகளை நடத்தும் மரபு பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. மறைந்த மாண்டலின் சீனிவாஸ் அங்கு முதன்முதலில் இசை நிகழ்ச்சி நடத்தியதாகவும், அன்று தொடங்கிய இசை மரபு இன்றளவும் தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நவராத்திரியை முன்னிட்டு, எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேத்திகள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றதுடன், இளையராஜா வீட்டில் அன்னதானமும் பலகாரங்களும் வழங்கப்பட்டன. கடந்த காலத்தில் தாங்கள் பசியுடன் இருந்த அனுபவத்தை மறக்காமல், இன்று பலருக்கு உணவு வழங்கும் வழக்கமாக மாற்றியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனது வீட்டு கொலு பற்றி, தனது ஆரம்பகால சென்னை நாட்கள் குறித்து இளையராஜா மனம் திறந்து வீடியோவில் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “1968-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நவராத்திரி விழா காலகட்டத்தில் தான் நான் சென்னை வந்தேன். அந்த நேரத்தில் நானும், அண்ணன் பாஸ்கர், பாரதிராஜா மூணு பேரும் சாப்பிடுறதுக்கு எதுவுமே இல்லாமல் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தோம். அப்போது வடபழனி கோவில் எதிரே இருக்கக்கூடிய வீதியில் நிறைய கடைகள் இருக்கும். நவராத்திரிக்காக மாலையில் பொரிகடலை, சுண்டல் கொடுப்பாங்க. எல்லாரும் வரிசையில் நின்னு வாங்கிட்டுப் போவாங்க.
நானும், பாரதிராஜா, பாஸ்கர் மூணு பேரும் எந்தெந்த கடைகளில் கொடுக்கிறாங்களோ அதுல போய் வரிசையில் நின்று வாங்கி, அதை ரூமிற்கு கொண்டு போய் பேப்பரை விரிச்சு, அதுல பொரி, கடலை, சுண்டல் என்னென்ன இருக்கோ அதெல்லாம் போட்டு, அதைச் சாப்பிட்டுவிட்டு குவளையில் இருக்கக்கூடிய தண்ணீரை குடித்துவிட்டு படுப்பது வழக்கம். அப்படிக் கழிந்தது அந்த நவராத்திரி.
இதை என் மனைவிகிட்ட சொல்லி இருக்கிறேன். அதனால நவராத்திரி நேரத்துல வீட்டில் நல்லா விமரிசையாகக் கொண்டாடணும்னு நவராத்திரி விழாவை அவர்மனைவி ஜீவா) தொடங்கினார். வீட்ல சின்ன கொலு வைக்க ஆரம்பிச்சா. மதிய நேரத்துல சாப்பாடு பொட்டலம் மாதிரி புளியோதரை, சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் பொட்டலமாக கொடுத்தார். நவராத்திரி நேரத்தில் இசைக் கலைஞர்களை அழைத்து கச்சேரி பண்ணுகிற அளவுக்கு அது வளர்ந்துவிட்டது. அந்த நேரத்திலும் எல்லோரும் சாப்பிட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்று எல்லோரையும் சாப்பிட வைத்துத்தான் அனுப்புவாள். அந்த வழக்கம் இன்னும் தொடர்கிறது.
அதாவது நாங்கள் பட்டினி கிடந்த நேரத்தை நினைவில் வைத்து இதை செய்தார். நவராத்திரி விழாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்று ஒரு உணர்வு என் மனைவிக்கு ஏற்பட்டது. ஒரு நல்ல நிகழ்வாகத்தான் நினைக்கிறேன். ஆனால் இதை வெளியில் விளம்பரப்படுத்த வேண்டுமென்றோ, வெளியில் சொல்லணும் என்றோ நினைச்சதில்லை” என்று இளையராஜா கூறியுள்ளார்.