சென்னை,
இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அவர், கதாநாயகனாகவும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்றளவும் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் முன்னோட்டம், முன்னறிவிப்புக் காட்சி மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இயக்குநர் எச்.வினோத், ‘நூறு சாமி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இப்போதுதான் ‘நூறு சாமி’ திரைப்படத்தை பார்த்தேன். அந்த படம் உண்மையிலேயே மிக மிக நன்றாக இருந்தது. இந்த ஆண்டின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். கட்டாயம் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம். அற்புதமாகவும், பிரமாதமாகவும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
எச்.வினோத்தின் இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, ‘நூறு சாமி’ படக்குழுவும் சமூக வலைதளத்தில் சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குநரின் பாராட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.