சினிமா செய்திகள்

"காரில் உட்கார்ந்து அழும் இயக்குநர்... வெற்றி வந்ததும் பெருமை பேசுகிறார்" - திருப்பூர் சுப்பிரமணியம்

திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த கருத்துகள் தற்போது திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், வெளியான நாள்முதல் வசூல் ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது.

வசூல் வேட்டையில் ‘கருப்பு’ திரைப்படம்

படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

திரையரங்கு வசூல் மூலமாக மட்டும் ‘கருப்பு’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது.

தயாரிப்பாளர்களின் கஷ்டம் யாருக்கும் தெரியாது

இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளரும், திரைப்பட விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் பேசிய கருத்துகள் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளன.

அவர் கூறுகையில், “எந்த ஒரு பெரிய திரைப்படமும் திட்டமிட்டபடி முடிவடைவது கிடையாது. உதாரணமாக ‘கருப்பு’ திரைப்படம் கடந்த தீபாவளிக்கே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் சுமார் எட்டு மாதங்கள் தாமதமாகி தற்போது வெளியாகியுள்ளது. ஒரு படம் வெளியாகும் முன்பு கடைசி இரண்டு நாட்களில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அவர்கள் அனுபவிக்கும் மனஅழுத்தங்களும் அவர்களுக்கே மட்டுமே தெரியும்” என்றார்.

“சூர்யாவைத் தவிர யாரும் வரவில்லை”

மேலும் அவர் கூறுகையில், “ஒரு திரைப்படம் வெளியீட்டு நேரத்தில் சிக்கல்களை சந்திக்கும்போது, அதில் பணியாற்றிய நடிகர்களோ அல்லது தொழில்நுட்பக் கலைஞர்களோ பெரும்பாலும் உதவிக்கு வருவதில்லை. ஆனால் ‘கருப்பு’ திரைப்படம் சிக்கலில் இருந்தபோது நடிகர் சூர்யா மட்டுமே நேரடியாக அக்கறை காட்டினார்.

படம் வெளியாவதற்கு முன்பு காரில் உட்கார்ந்து கொண்டு கவலையால் கண்ணீர் வடிக்கும் இயக்குநர்கள் கூட, படம் வெற்றியடைந்த பிறகு ‘இந்த வெற்றிக்கு நான்தான் காரணம்’ என்று பெருமை பேசத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் ஒரு படம் வெளியாவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த கருத்துகள் தற்போது திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.