சென்னை,
முரட்டுக்காளை' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இதனுடன் 'அண்ணாமலை' திரைப்படமும் ரஜினியின் பிறந்தநாள் சிறப்புத் திரையிடலுக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'முரட்டுக்காளை'. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான 'முரட்டுக்காளை' திரைப்படம் 1980-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியானது. ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவனத்துடன் ரஜினிகாந்த் முதன்முறையாக இணைந்த திரைப்படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதிய இப்படத்தில் ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். அக்காலகட்டத்தில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இப்படம், ரஜினிகாந்தின் அதிரடி நாயகன் என்ற அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியது.
இப்படத்தில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், ஜல்லிக்கட்டு காட்சி, ரெயில் சண்டைக்காட்சி உள்ளிட்டவை அக்காலத் திரைப்படங்களில் முக்கியமான காட்சிகளாகப் பேசப்பட்டன. குறிப்பாக, ரஜினிகாந்த் பேசும் 'சீவிடுவேன்' என்ற வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது வெற்றிப் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 'முரட்டுக்காளை' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இதனுடன் 'அண்ணாமலை' திரைப்படமும் ரஜினியின் பிறந்தநாள் சிறப்புத் திரையிடலுக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் ஆரம்பகால அதிரடி திரைப்படத்தைப் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.