சென்னை,
நடிகர் பேசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மலையாளத் திரையுலகில் நடிகராகவும், இயக்குநராகவும் பிரபலமானவர் பேசில் ஜோசப். இவர் இயக்கிய ‘மின்னல் முரளி’ திரைப்படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ‘ஜெய ஜெய ஹே’, ‘பொன்மேன்’, ‘பேலிமி’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
இந்நிலையில், தமிழில் முதன்மை கதாபாத்திரத்தில் பேசில் ஜோசப் அறிமுகமாகும் திரைப்படம் ‘ராவடி’. இதில் ‘சிறை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த எல்.கே. அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யன், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. தொடர்ந்து வெளியீட்டுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ‘ராவடி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா’ நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை அறிவு பாடியுள்ளார். பாடல் வரிகளை உதய் எழுதியுள்ளார். வெளியான குறுகிய நேரத்திலேயே இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு இந்தப் பாடல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.