சென்னை,
மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலை வரும் நவம்பர் 20-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.பி.ஜெகன், அடுத்ததாக ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் கே.பி.ஜெகன் தன்னுடைய பெயரிலேயே ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக விஜய் வர்மா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘வடம்’ படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார்.
மேலும், மவுனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர், சாய் அபிநயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், சிவனடியார் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, இயக்குநர் திரைவண்ணன் மற்றும் அறிமுகப் பெண் கவிஞர் சக்தி உமா பாலகிருஷ்ணா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இதில் மறைந்த தேனிசைத் தென்றல் தேவா கடைசியாகப் பாடிய மனதை உருக்கும் ஆன்மிகப் பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தேவாவின் பிறந்தநாளான நவம்பர் 20-ந் தேதி ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தேவாவின் பிறந்தநாளில் அவரது குரல் இடம்பெற்றுள்ள பாடல் வெளியாக இருப்பது இசை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. முழுப் படமும் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் கே.பி.ஜெகனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.