சினிமா செய்திகள்

முதல் தமிழ் நடிகர்... சர்வதேச மேடையில் விஜய் சேதுபதிக்கு கிடைத்த பெருமை

சர்வதேச எம்மி விருது மேடையில் விருது வழங்கிய முதல் தமிழ் நடிகர் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெற்றுள்ளார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, சர்வதேச அளவில் நடைபெற்ற 54-வது சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கி புதிய பெருமையைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹில்டன் மிட் டவுன் ஓட்டலில் நவம்பர் 23-ம் தேதி நடைபெற்ற இந்த விழாவில் (இந்திய நேரப்படி நவம்பர் 24 இன்று), விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கருப்பு நிற கோட்-சூட் அணிந்து சென்ற அவர், விழா மேடையில் விருது வழங்கினார்.

முதல் தமிழ் நடிகர் என்ற பெருமை

சர்வதேச எம்மி விருது மேடையில் விருது வழங்கிய முதல் தமிழ் நடிகர் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சர்வதேசத் திரைப்பட மேடையில் தமிழ் சினிமாவின் பிரதிநிதித்துவத்தையும் அவர் உயர்த்தியுள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு சர்வதேச எம்மி விருது விழாவை இந்திய நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் தொகுத்து வழங்கினார். அதேபோல், 2016-ம் ஆண்டு நடைபெற்ற பிரைம்டைம் எம்மி விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா விருது வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகனுடன் பங்கேற்பு

இந்த விருது விழாவில் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யா விஜய் சேதுபதியுடன் கலந்துகொண்டார். இருவரும் கருப்பு நிற கோட்-சூட் அணிந்து விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சர்வதேச அளவில் இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமி வாரிய உறுப்பினரும் தயாரிப்பாளருமான கவிதா குப்தா மூலமாக விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச மேடையில் விருது வழங்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்குப் பெருமை சேர்த்துள்ள விஜய் சேதுபதிக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT