சினிமா செய்திகள்

"இனிதான் ஆட்டமே சூடு பிடிக்கப்போகிறது"- நடிகை ஜூலி பதிவு

நடிகையும், திமுக ஆதரவாளருமான ஜூலி த.வெ.க. தலைவர் விஜய்யின் வெற்றி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நர்ஸாக பணியாற்றி வந்த ஜூலி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார். அந்த போராட்டத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற அவர், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். அண்மைக்காலமாக ஜூலியின் பெயர் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆதரவாளருமான ஜூலி, சமீப காலமாக தவெக கட்சி தலைவர் மற்றும் நடிகர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் த.வெ.க. வெற்றி பெற்று, 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. த.வெ.க.-வின் இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், நடிகையும், திமுக ஆதரவாளருமான ஜூலி த.வெ.க. தலைவர் விஜய்யின் வெற்றி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில், "எங்க ஜூலியை காணோம் என காணவில்லை போஸ்டர் ஒட்டுகிறார்கள். நான் எங்கும் செல்லவில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். உங்கள் வெற்றிக்காக எனது வாழ்த்துகள். அரசியலில் நிரந்தர வெற்றியும் கிடையாது; நிரந்தர தோல்வியும் கிடையாது. இது நன்கு தெரிந்த கட்சி திமுக. நாங்கள் வெற்றி பெற்று உட்கார்ந்ததை விட தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்ததுதான் அதிகம். இதற்கெல்லாம் திமுக துவண்டுவிடாது. எதிர்க்கட்சியாக திமுக இருந்தால் அது எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியாது. சண்டை செய்து பழகியவர்கள் நாங்கள். எதற்கும் தயாராக இருக்கிறோம். களத்திற்கு இப்போதானே வந்திருக்கிறீர்கள். இனிதான் ஆட்டமே சூடுபிடிக்கப்போகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.