இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் போர் சூழல் உலகளவில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த போரின் விளைவுகள் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
"இஸ்ரேல் – ஈரான் போருக்கு
இரண்டு விளைவுகள் உண்டு
ஒன்று
நிகழ்கால விளைவுகள்
இரண்டு
நெடுங்கால விளைவுகள்
ஹோர்முஸ் நீரிணையின்
போக்குவரத்து
70விழுக்காடு குறைந்துவிடும்
மொத்தத்தில்
16.2 லட்சம் கோடியை
மத்திய கிழக்கு இழக்கும்
36லட்சம் பேர்
வேலை இழப்பர்
40லட்சம் பேர்
வறுமையின் பதுங்கு குழிக்குள்
ஒதுங்குவர்
போர் என்பது
விலை உயர்ந்ததல்ல
மலிவான பொருள் என்பதை
இந்தப் போர் உலகுக்குக்
காட்டிக் கொடுத்துவிடும்
1800கோடி
இஸ்ரேல் ஏவுகணையை
50ஆயிரம் ரூபாய்
ஈரானிய ட்ரோன்
பிரித்து மேய்ந்துவிட்டதே
இதற்கு சாட்சி
பெட்ரோலின்
துணைப்பொருளான
உர விநியோகத்தின் கட்டுப்பாடு
ஆசியாவின் உணவுத்
தட்டுப்பாட்டில் முடியும்
இந்தப் போரின்
உடன்விளைவாக
பல நாடுகளிலும்
பாழ்செய்யும் பல்குழுக்கள்
தோன்றக் கூடும்
பல நாடுகளில்
தெருச் சண்டைகள்
கடைகளில் விற்கும்
விலைவாசியும் பஞ்சமும்
அறங்களை உடைக்கும்
சமூக மனிதன்
சுயநலப் பூச்சியாவான்
இனி நெடுங்கால
விளைவுகளைப் பார்ப்போம்
பிற நாடுகளை
ஒரு நாடு கட்டுப்படுத்தும்
வல்லாதிக்கம் ஒழியக்கூடும்
அதிகார அப்பத்தை
நாடுகள் பங்கிட்டுக்கொள்ளும்
குழந்தைகள் மனதில்
பொத்திவைத்த புழுக்கம்
கால்நூற்றாண்டுக்குப் பிறகு
சமூக வன்முறைகளாய்
வெவ்வேறு வடிவில் வெடிக்கும்
ஈரானைவிட்டு வெளியேறிய
அறிவார்ந்த கூட்டம்
உலகமெங்கும்
கண்ணுக்குத் தெரியாத
பாரசீகக் கலாசாரச் சந்தையை
உருவாக்கும்
ஒரே ஒரு நல்லது நடக்கும்
எண்ணெய்ச் சார்பைவிட்டு
இந்த உலகத்தை
விடுவிக்கும் விஞ்ஞானத்தை
வெவ்வேறு மூளைகள்
ஒரே மாதிரி சிந்திக்கும்"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.