சினிமா செய்திகள்

‘ராட்சசன்’ கூட்டணியின் அடுத்த படம்.. கிறிஸ்துமஸ் வெளியீட்டுக்கு தயாராகும் ‘இரண்டு வானம்’

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

சென்னை,

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீண்டும் இணைந்த ராம்குமார் - விஷ்ணு விஷால்

‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராம்குமார். இதையடுத்து, விஷ்ணு விஷாலுடன் இரண்டாவது முறையாக இணைந்து ‘ராட்சசன்’ திரைப்படத்தை இயக்கினார். திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படமாகத் திகழ்கிறது. இதனைத் தொடர்ந்து, ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘இரண்டு வானம்’. இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அன்பை மையமாகக் கொண்ட கதை

ஒருவரின் வாழ்க்கையில் உண்மையான அன்பு கிடைக்கும்போது, அவருக்குள் ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 150 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

டிசம்பர் 24-ந்தேதி வெளியாகுமா?

‘இரண்டு வானம்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 23-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில காரணங்களால் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இப்படம் வரும் டிசம்பர் 24-ந்தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், புதிய வெளியீட்டுத் தேதி குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT