சென்னை,
2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் சிறப்பு தோற்றங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாகத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.
‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நேற்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் 'ஜெயிலர் 2' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது. அதன்படி, இப்படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ஜெயிலர் 2 படத்தின் மற்றொரு அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி, 'ஜெய்லர் 2' படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்த ஒன் நேம் (One Name) என்ற ஆடியோ ட்ராக் இன்று மாலை வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.