சினிமா செய்திகள்

வெளியீட்டுக்கு முன்பே சாதனை படைத்த ‘தி ஒடிசி’... அதிக விலை டிக்கெட்டுகளுக்கு ரசிகர்கள் போட்டி

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ படம் வருகிற ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது.

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ஒடிசி’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இப்படத்திற்கான முன்பதிவுகள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றன.

‘பேட்மேன்: தி டார்க் நைட்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘இன்செப்ஷன்’, ‘தி பிரெஸ்டீஜ்’ மற்றும் ‘ஓப்பன்ஹெய்மர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன், தனது தனித்துவமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புக்காக உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரது ஒவ்வொரு படைப்பும் திரைப்பட ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

நட்சத்திர பட்டாளத்துடன் உருவான ‘தி ஒடிசி’

நோலனின் 13-வது திரைப்படமான ‘தி ஒடிசி’யில் ஹாலிவுட் நடிகர்களான மேட் டாமன் மற்றும் ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்களின் மூலம் உலகளவில் பிரபலமான டாம் ஹாலண்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அன்னே ஹாத்வே, ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

பண்டைய கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காவியக் கவிதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 17-ந் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தியாவில் டிக்கெட்டுகளுக்கு கடும் கிராக்கி

‘தி ஒடிசி’ திரைப்படம் முழுவதுமாக ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்பதால், அதன் ஐமேக்ஸ் காட்சிகளை திரையரங்குகளில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் முன்னோட்டக் காட்சி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். அதிகபட்சமாக ரூ.3,300 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த டிக்கெட்டுகள் கூட வெளியீட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளன.

வேகமெடுக்கும் டிக்கெட் விற்பனை

அதேபோல் ரூ.2 ஆயிரம் வரையிலான முன்வரிசை டிக்கெட்டுகளும் வேகமாக விற்பனையாகி வருகின்றன. உயர்ந்த விலை இருந்தபோதிலும் ரசிகர்கள் காட்டும் இந்த வரவேற்பு, இந்திய திரைப்பட வர்த்தக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியீட்டுக்கு முன்பே ‘தி ஒடிசி’ திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதன் வசூல் மற்றும் வரவேற்பு குறித்து திரையுலகில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.