சினிமா செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ஒரே தமிழ்ப் படம்... ‘கூடு’

இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 முதல் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

காலா பிரீமியர்ஸ்’ பிரிவில் 9 மொழித் திரைப்படங்களுடன் ‘கூடு’ படமும் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழ் திரையுலகிற்கு கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது

கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2026), ‘கூடு’ என்ற தமிழ்த் திரைப்படம் திரையிடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவின் முக்கியப் பிரிவுகளில் ஒன்றான ‘காலா பிரீமியர்ஸ் – திரைப்படங்கள்’ (Gala Premieres – Feature Films) பிரிவில் இப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் தேர்வாகியுள்ள 9 மொழித் திரைப்படங்களில், இடம்பெற்றுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குநர் இயக்கிய படம்

அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வி.ஜே. கதிர்ரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ் (Panorama Studios), ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளன. பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

மனிதநேயத்தைப் பேசும் கதை

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதநேயம், கருணை மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான படைப்பாக ‘கூடு’ திரைப்படம் உருவாகியுள்ளது. சமூகத்தில் மனிதர்களுக்கு இடையிலான உறவுகளையும், ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையையும் இப்படம் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நவம்பர் 20 முதல் திரைப்பட விழா

இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 முதல் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவின் ‘காலா பிரீமியர்ஸ்’ பிரிவில் 9 மொழித் திரைப்படங்களுடன் ‘கூடு’ படமும் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழ் திரையுலகிற்கு கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தப் பிரிவில் தேர்வான ஒரே தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT