சினிமா செய்திகள்

10 கோடி பார்வைகளை கடந்த “தி பாரடைஸ்” படத்தின் “ஆயா சேர்” பாடல்

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படம் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகவுள்ளது.

நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தசரா’. ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. ‘தசரா’ படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆயா சேர்’ பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அனிருத் இசையமைத்த இப்பாடலை அதுல்லா ஜாங்கிரெட்டி, அர்ஜுன் சாண்டி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் இப்பாடலின் நடன அசைவுகளை மறு உருவாக்கம் செய்து பலரும் ரீல்ஸ் செய்தனர். அண்மையில், ஐதராபாத்தில் அனிருத் நடத்திய இசைக்கச்சேரியில் ‘ஆயா சேர்’ பாடல் பாடப்பட்டதும் நானி உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர்.