மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'பிரேமலு'. இதில் நடிகை மமிதா பைஜு, நடிகர் நஸ்லென் மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, சங்கீத் பிரதாப் நடித்த அமல் டேவிஸ் கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த நிலையில், 'பிரேமலு' படத்தில் இணைந்து நடித்த மமிதா பைஜுவும் சங்கீத் பிரதாப்பும் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
இந்தப் புதிய படத்திற்கு 'ஹலோ டியர்' (Hello Dear) என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் டினாய் பாலோஸ் இப்படத்தை இயக்கி வருகிறார். ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆஷிக் உஸ்மான் தயாரிக்கிறார். இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு காதல் நகைச்சுவை திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சுரேஷ் கிருஷ்ணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் கவனிக்க, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இந்த நிலையில், படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, அதன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, 'ஹலோ டியர்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மமிதா பைஜு - சங்கீத் பிரதாப் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'பிரேமலு' படத்தில் மமிதா பைஜு ரீனு கதாபாத்திரத்திலும், சங்கீத் பிரதாப் அமல் டேவிஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இதனால் புதிய படத்தின் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள், பழைய கதாபாத்திரங்களை நினைவுகூர்ந்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
சிலர், "இது 'பிரேமலு 2' போல இருக்கிறது" என்றும், அமல் டேவிஸ் மீண்டும் வந்துவிட்டாரா என்றும் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் 'ஹலோ டியர்' படத்தின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.