சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்று விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். நேரில் சந்தித்தும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது. விஜய் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால், திரைத்துறையில் அவருடன் நெருங்கி பழகிய இயக்குனர்கள், சக நடிகர்கள் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே பாலாஜி முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இந்தச் சந்திப்பு குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: `கருப்பு திரைப்படத்திற்காக எல்லாவற்றையும் தொடங்கி வைத்த மனிதருடன்...! மாண்புமிகு தமிழக முதலமைச்சராக அவரை இப்போது சந்திப்பது முற்றிலும் ஒரு கனவு போன்ற உணர்வைத் தருகிறது!!! அதே அன்பு, அரவணைப்பு, கனிவு மற்றும் அமைதி...!!! எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி என் அன்பிற்குரிய விஜய் சார்" என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.