சென்னை,
'யாத்திசை' போலவே, இரண்டாம் உலகப்போரைப் பற்றிப் பேசும் இந்தப் படமும் பேச மறந்த வரலாற்றுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியாக அமையும். தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பாக இந்தப் படம் இருக்கும்" என்றார் இயக்குனர் தரணி ராசேந்திரன்.
'யாத்திசை' திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் தரணி ராசேந்திரன். வரலாற்றுப் பின்னணியில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான இப்படத்தைத் தொடர்ந்து, தற்போது 'டெத் ரெயில்வே' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சேயோன், பவானிஸ்ரீ, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாகர்கோவிலில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் தனது படைகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்காக பர்மா - தாய்லாந்து இடையே ரெயில் பாதை அமைத்தது. இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஏராளமான தமிழர்கள் கடுமையான துயரங்களைச் சந்தித்தனர். அவர்களில் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாகக் கொண்டே 'டெத் ரெயில்வே' திரைப்படம் உருவாகியுள்ளது.
படம் குறித்து இயக்குனர் தரணி ராசேந்திரன் கூறுகையில், "இந்த ரெயில்வே பாதை அமைக்கப்பட்ட பின்னணியில் சுமார் 2 லட்சம் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்களின் பின்னணியில்தான் அந்தப் பாதையே உருவானது. சிறுவயதில் இருந்தே என் நெஞ்சில் குத்திய முள்ளாக இந்த வரலாறு இருந்து வந்தது. அதனைத் திரைப்படமாக உருவாக்கியுள்ளேன். உயிர்த்தியாகம் செய்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் படமாக இது இருக்கும். 'யாத்திசை' போலவே, இரண்டாம் உலகப்போரைப் பற்றிப் பேசும் இந்தப் படமும் பேச மறந்த வரலாற்றுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியாக அமையும். தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பாக இந்தப் படம் இருக்கும்" என்றார்.
மறைக்கப்பட்ட வரலாற்றையும் தமிழர்களின் தியாகத்தையும் திரையில் பதிவு செய்யும் முயற்சியாக உருவாகியுள்ள 'டெத் ரெயில்வே' படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.